சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் உரைக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பரபரப்பானது.

தொடர்ந்த கோஷம் மற்றும் இடையூறுகளுக்கிடையில், எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அமைதியாக இருந்து நடந்தவற்றை கவனித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அமளி நீடித்த போதும் அமைதி காத்ததற்காக இபிஎஸை சபாநாயகர் பிரபாகர் அவையில் பாராட்டினார். அதேபோல் த.வெ.க. உறுப்பினர்களும் அமைதி காத்ததை குறிப்பிட்டு, அது அவர்களது தலைவர் கற்றுக் கொடுத்த நல்ல பண்பு எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் திமுகவை கடுமையாக விமர்சித்த சபாநாயகர், சட்டசபையின் மாண்பை குறைக்கும் விதத்தில் செயல்படுவது போன்ற “பயிற்சி” பெற்றுக் கொண்டு வந்துள்ளனர் என குற்றம்சாட்டினார். மேலும், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தும் அவைக்கு வந்ததாக கூறிய அவர், முதல்வர் உரையின் போது நடந்த முறையால் தன் ரத்த அழுத்தம் உயர்ந்ததாகவும், அதையே ‘மருத்துவர் இல்லாத சிகிச்சை’ என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.