சென்னை: தமிழக அரசின் முதல் 100 நாட்கள் செயல்பாடுகளை மதிப்பீடு செய்த பின், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதல்வர் உட்பட அமைச்சரவையில் தற்போது 35 பேர் உள்ளனர்; காங்கிரஸில் இருந்து இருவர், வி.சி.க. மற்றும் முஸ்லிம் லீக்கில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக உள்ளனர்.

வட்டாரங்களின் தகவல்படி, அமைச்சர்கள் தங்கள் துறைகளில் மேற்கொண்ட பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள், தொகுதி செயல்பாடுகள் மற்றும் கட்சியினருடன் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி, முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி அறிக்கைகள் அளித்துள்ளனர்.

தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுவதாவது: இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டாலும், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற கருத்துகள் துறைச் செயலர்கள் வழியாக முதல்வருக்கு சென்றுள்ளன. மேலும், தங்கள் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளையே சிலர் மதிக்கவில்லை என்ற புகார்களும் வந்ததாக கூறப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம். கூட்டணி கட்சிகளில் ஒருவரின் இலாகா மாற்றம் செய்யப்படலாம் என்றும், த.வெ.க. அமைச்சர்களில் ஒரு பெண் அமைச்சர் உட்பட மூன்று பேர் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரிய இலாகா வேண்டாம் என ஒரு அமைச்சர் கேட்டதாக கூறப்படுவதால் அவரது இலாகாவும் மாற்றப்படலாம். இந்த தகவல்கள் வெளியானதால் பல அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.