கோவையில் காவல்துறையினர், பணிச்சுமை அதிகரிப்பால் குடும்ப வாழ்க்கை மற்றும் மனநலத்தில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு, மதுவிலக்கு, சைபர் கிரைம், பெண்கள் தொடர்பான சிறப்பு பிரிவுகள், சமூக வலைதள கண்காணிப்பு போன்ற பிரிவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ற புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வழக்கமான பணிகளில் உள்ளவர்களை மாற்றுப் பணிக்கு அனுப்பும் நிலை தொடர்வதால், தனி மனிதவளம், அலுவலக வசதி, வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல் நிலையங்களில் ரோந்து, பீட் பணி, வாகன சோதனை, புகார் மனுக்கள் பெறுதல், வழக்குப்பதிவு, விசாரணை, கைது, நீதிமன்ற பணி, கைதிகளை அழைத்துச் செல்லுதல், சம்மன் வழங்குதல், ஆவணப்பணி என பணிகள் நீள்கின்றன. இதனுடன் போராட்டம், தேர்தல், திருவிழா, வி.ஐ.பி. பாதுகாப்பு, ரவுடிகள் கண்காணிப்பு, போதைப்பொருள் தடுப்பு, சைபர் மற்றும் போக்சோ வழக்குகள் போன்ற கூடுதல் பொறுப்புகள் சேருவதால், ஆட்கள் பற்றாக்குறையால் வார விடுமுறை பெரும்பாலும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், போலி கணக்குகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடி, ஆன்லைன் முதலீட்டு ஏமாற்று, தரவு திருட்டு போன்ற புதிய முறைகளை குற்றவாளிகள் பயன்படுத்துவதாகக் கூறினர். இதை எதிர்கொள்ள நவீன கணினிகள், மென்பொருட்கள், டிஜிட்டல் தடய ஆய்வு கருவிகள், டேட்டா பகுப்பாய்வு வசதிகள் மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்ப பயிற்சி அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவது புதிய கட்டடங்கள், திட்டங்கள் மட்டுமல்ல; காவலர்களின் உடல்-மனநிலை மற்றும் பணிச்சூழலும் முக்கியம் என அவர்கள் கூறினர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால்தான் காவல்துறை வலுப்பெற்று, மாநிலத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் இலக்கு நிறைவேறும் என்றும் தெரிவித்தனர்.