தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க, தனித்தனி சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்து அறிவிப்பாணை வெளியிட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ஐஏ மற்றும் உபா (UAPA) சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
என்ஐஏ, உபா வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா) தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதில் தாமதம் இருப்பதை சுட்டிக்காட்டியது. நாடு முழுவதும் இதுவரை 22 பிரத்யேக என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல மாநிலங்களுக்கு தெளிவான காலக்கெடுவை அமர்வு நிர்ணயித்தது. தமிழகமும் தெலுங்கானாவும் தலா ஒரு கூடுதல் தனி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தை இரண்டு வாரங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கேரளாவில் இரண்டு புதிய சிறப்பு நீதிமன்றங்களை நான்கு வாரங்களுக்குள் அமைத்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
கர்நாடகாவில் பெங்களூரு, சிக்கமகளூரு, உடுப்பி ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட மூன்று நீதிமன்றங்கள் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என அம்மாநில தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். மேற்கு வங்கத்தில் மேலும் மூன்று நீதிமன்றங்களையும், அசாமில் மேலும் இரண்டு நீதிமன்றங்களையும் விரைவாக அமைக்கவும் அமர்வு உத்தரவிட்டது.
வழக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதே இந்த நீதிமன்றங்களின் முதன்மை நோக்கம் என்றும், விசாரணை விரைவாக நடைபெற ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் 10 முதல் 12 வழக்குகளுக்கு மேல் ஒப்படைக்கக் கூடாது என்றும் அமர்வு தெரிவித்தது. மேலும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரிப்பதை குறிப்பிட்டு, நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட நிலுவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு தனி சிறப்பு நீதிமன்றங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாக அமைத்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.





