மதுரை கிழக்கு தவெக எம்எல்ஏ கார்த்திகேயன், ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு மதுரையில் அரசு சார்பில் வெண்கலத் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர் இந்த கோரிக்கையை சட்டசபையில் உரையாற்றும் போது முன்வைத்தார்.
மதுரையைச் சுற்றிய பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு மக்கள் விழாவாக உள்ளூர் அளவில் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், பாரம்பரிய இடங்களில் போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றார். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் மற்றும் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கூறினார். அதோடு, ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பாதுகாப்பு மையங்கள் அமைத்து, காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுதந்திரப் போராட்டத்தின் முன்னோட்டமாக மதுரையில் நடந்ததாக கூறப்படும் ‘நத்தம் கணவாய் போர்’ முக்கியத்துவம் பெறுகிறது என தெரிவித்த அவர், இதை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் மதுரை சத்திரப்பட்டியில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார். மேலும் அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அழகு முத்து கோன் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோருக்கும் மதுரையில் அரசு சார்பில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.





