சென்னை: காவல் துறை மானியக்கோரிக்கை மீதான சட்டசபை விவாதத்தின் போது, தாம் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்கவில்லை என்றும், ஆதாரமின்றி தி.மு.க. மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்தார்.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரிடம் நேரடியாக 15 கேள்விகளை முன்வைத்ததாகவும், ஆனால் அவற்றில் ஒன்றுக்கும் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். மேலும், முதல்வர் சட்டசபையில் கூறியவை தயாரித்த உரையை மனப்பாடம் செய்து பேசியது போல இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

சபாநாயகர் நடவடிக்கையையும் அவர் விமர்சித்தார். அரசு மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அவைக்குறிப்பில் பதிவேற்றப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்க தங்களுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறினார். இதனால், முதல்வரின் உரையை முழுமையாக கேட்ட பிறகு எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

மேலும், இந்த அரசின் மீது வெளிப்படையான குற்றச்சாட்டை வைப்பதாக கூறிய உதயநிதி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முதல்வரின் நண்பர்கள் அரசு நடத்தும் கனிம வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கான ஒவ்வொரு ஆதாரங்களையும் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.