ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் அறிமுக நிகழ்வை இன்று (செப்டம்பர் 9) நடத்துகிறது. இதில், அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய (ஃபோல்டபிள்) ஐபோன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வுக்கு முன்பாக, அறிவிக்கப்படக்கூடிய சாதனங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த மடிக்கக்கூடிய ஐபோன், ஆப்பிளின் மிக விலையுயர்ந்த போனாக இருக்கும் என்றும், ஆரம்ப விலை சுமார் 2,000 டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,90,251) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் ‘ஐபோன் அல்ட்ரா’ அல்லது ‘ஐபோன் ஃபோல்டு’ என பெயர் வைக்கப்படலாம் என பேசப்பட்ட நிலையில், தற்போது ‘ஐபோன் டுயோ’ என்ற பெயர் வரக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது யூடியூப் சேனல் மூலம் நேரடியாகக் காண முடியும்.
சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் நுழைந்ததற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் இந்த வடிவில் தனது முதல் முயற்சியை மேற்கொள்கிறது. மேலும், இன்றைய நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட ஹோம்பாட், கேமரா வசதியுடன் கூடிய ஏர்பாட்ஸ் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




