கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு (FSDA) பெங்களூரில் பல இடங்களில் நடத்திய சோதனைகளில், அமேசான் மற்றும் ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய வளாகங்களில் இருந்து ரூ.1.43 கோடி மதிப்பிலான காலாவதி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
நகரில் அதிகரித்து வரும் ‘பெப்டைடு பார்ட்டி’ தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கோரமங்களாவில் கடந்த மாதம் நடந்ததாக கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து, தேவனஹள்ளியில் உள்ள அமேசான் வளாகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, இணையதளம் மூலம் விற்கப்படும் பொருட்களின் லேபிள்களில் உற்பத்தி/காலாவதி தேதி, சேமிப்பு காலம் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என பரிசோதித்தனர்.
தேவனஹள்ளி வளாகத்தில் தவறான அல்லது முழுமையற்ற லேபிள் கொண்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களும், காலாவதியான ரூ.10 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களும் சேர்த்து ரூ.24 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேவையான உரிமம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.2.45 லட்சம் மதிப்பிலான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. இதேபோல், ஆனேக்கல்லில் உள்ள அமேசான் மையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகார்களின் அடிப்படையில் எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள சப்தா பஜாரிலும் சோதனை நடத்தப்பட்டு, காலாவதியான முந்திரி பருப்பு, பிஸ்கட், ராகி மாவு, சிக்கன் கட்லெட், பனீர், குக்கீஸ், முட்டை, மாவு உள்ளிட்ட ரூ.10,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லிங்கராஜபுரத்தில் உள்ள ‘லியோ 7’ என்டர்பிரைசசில் காலாவதி/காலாவதியாகும் தருவாயில் இருந்த ஊட்டச்சத்து பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட்கள், இனிப்புகள், நெய், விதைகள் உள்ளிட்ட ரூ.56 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹொஸ்கோட்டில் உள்ள ஸ்விக்கி ‘இன்ஸ்டாமார்ட்’ கிடங்கிலும் ரூ.42 லட்சம் மதிப்பிலான காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான காலாவதி மற்றும் தவறாக லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் காதர், காலாவதியான மருந்துகளுக்கு மீண்டும் லேபிள் ஒட்டி விற்பனை செய்வது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், காலாவதி பொருட்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொது சுகாதாரத்தை பாதிக்கும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.




