மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, 2018-ல் ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசிய உரையிலிருந்து உருவானது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றம்சாட்டியதுடன், பிரதமரை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் கிர்காம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பா.ஜ.க. பிரமுகர் ஸ்ரீஷ்ரிமால் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விளக்கம் கேட்டு 2019-ல் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை எதிர்த்து ராகுல் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதி என்.ஆர். போர்கர், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவில் குறைபாடு எதுவும் இல்லை என்றும், அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த புகார் தொடர்பான விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.





