தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவி விலகி பின்னர் தவெகவில் இணைந்தனர். மேலும், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ததால் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.17; வாபஸ் பெற கடைசி நாள் செப்.19. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்றும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரு தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த இரு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களையும் கட்சி அறிவித்துள்ளது. 2021ல் எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற பரந்தாமனுக்கு சமீபத்திய பொதுத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இம்முறை இடைத்தேர்தலில் மீண்டும் சீட் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.




