சென்னை: சட்டசபையில் பேசியபோது தன்னால் செய்யப்பட்ட ஒரு சைகை எதேச்சையாக வெளிப்பட்டது; அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

செப். 7 அன்று காவல் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலுரையளிக்கும்போது, திமுக மீது அவர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது ‘மிசா’ குறித்து பேசும் வேளையில், தாடையைத் தட்டி சைகை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சைகை சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ‘மிசா’ காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காவல் துறையால் தாக்கப்பட்டு தாடை உடைந்ததாக கூறப்படும் சம்பவத்தை கேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், சட்டசபை பதிலுரையின்போது தன் உடல்மொழி தன்னிச்சையாக வெளிப்பட்டதே தவிர, எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று விஜய் கூறினார். இதை யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் செயலாக அர்த்தம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.