ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.

திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்து, சில வரிகள் நீக்கப்பட்ட பதிப்பை இசைப்பது என்ற காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு தெரிவித்து அதில் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால் தேசிய மாநாட்டு கட்சி இதை நிராகரித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது, பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்பதைக் கூட்டணி கட்சிகள் உத்தரவிடக் கூடாது என்றும், எதையும் திணிக்க முடியாது என்றும், இது மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் இண்டி கூட்டணிக்குள் உரசலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடல் இசைக்கப்பட்டபோது, சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.