மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்.6 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா, அல்லது விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இடைத்தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. பலமாக இருப்பதாகவும், முந்தைய தேர்தல் முடிவுகள் மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசங்களை அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மும்முனை போட்டி உருவானால் த.வெ.க.க்கு சாதகமாகும் என்றும், இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் உள்ளாட்சி தேர்தல் கணக்குகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். அதே நேரத்தில் திமுக போட்டியிடாமல் விலகினால், திரைமறைவில் அ.தி.மு.க. வெற்றிக்கு உதவி செய்து த.வெ.க.வை இரு தொகுதிகளிலும் வீழ்த்தலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் தேர்தல் களத்தை தவிர்ப்பது த.வெ.க.க்கு பயந்து பின்வாங்கியதாக விமர்சிக்கப்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவுக்கான ஆலோசனைகள் தொடர்கின்றன.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என குறிப்பிட்டார். இடைத்தேர்தலில் திமுக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.