சென்னை: சர்க்காரியா கமிஷன், மிசா கால கைது விவகாரம் மற்றும் அமலாக்கத்துறை (ED) அறிக்கை குறித்து முதல்வர் விஜய் பேசியதை சட்டசபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபையில் ஏற்பட்ட அமளி தீவிரமடைந்த நிலையில், சபை காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர்.
நேற்று காலை 9.30 மணிக்கு சபை கூடியதும் தி.மு.க. கொறடா எ.வ.வேலு எழுந்து, சட்டசபை மரபுகள் மற்றும் விதி 92-ஐ மேற்கோள் காட்டி, நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்களை விவாதிக்கக் கூடாது என்றார். விசாரணையில் உள்ள வழக்குடன் தொடர்புடைய ED அறிக்கையை முதல்வர் வாசித்ததாகக் கூறி, அது மரபு மீறல் எனவும், அந்தப் பேச்சை பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் எதிர்ப்பு தெரிவித்து, மிசா கைது தொடர்பான தி.மு.க. தரப்பின் கூறுகைகளை மறுத்தார். மேலும் சர்க்காரியா கமிஷனில் முன்னாள் தி.மு.க. தலைவர்கள் மீது ஆதாரங்கள் உள்ளதாகவும், பழைய வரலாற்றை மீண்டும் கிளறினால் தி.மு.க. குறித்த உண்மைகள் வெளிவரும் எனவும் கூறினார்.
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்; முதல்வர் பேச்சை நீக்குமாறு வலியுறுத்தினர். அமளியின் போது ஒரு அமைச்சரின் இடைமறிப்பை சபாநாயகர் பிரபாகர் கண்டித்தார். பின்னர், பொதுவெளியில் உள்ள ED அறிக்கை பற்றியே முதல்வர் பேசியதாகவும், இதுபோன்ற விஷயங்கள் ஏற்கனவே சபையில் பேசப்பட்டுள்ளதால் பேச்சை நீக்கத் தேவையில்லை எனவும் அவர் தீர்ப்பளித்தார்.
ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து தொடர்ந்து கோஷமிட்டதால், சபாநாயகர் ஒரு நிமிடம் அவகாசம் அளித்து அமைதியாக அமர்ந்தால் எ.வ.வேலுவுக்கு பேச அனுமதி தருவதாக தெரிவித்தார். அதன்பிறகும் அமளி நீடித்ததால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்; தொடர்ந்து அவர்கள் சபையிலிருந்து தூக்கி வெளியேற்றப்பட்டனர். பின்னர், வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும், நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தும், அமைதி காத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும் சபாநாயகர் கூறினார்.




