புதுடில்லி: வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘படா’ (FADA) ஆகஸ்ட் மாத மின் வாகன விற்பனை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் மின் வாகன விற்பனை 52.85% உயர்ந்து வலுவாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1.95 லட்சம் மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டில் 2.98 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

படா தலைவர் சாய் கிரிதர் கூறுகையில், ஆகஸ்ட் மாத மொத்த வாகன விற்பனையில் மின் வாகனங்களின் சந்தைப் பங்கு 9.5% இலிருந்து 12.3% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மொத்த வர்த்தக வாகன விற்பனையிலும் மின் வாகனங்களின் சந்தைப் பங்கு 5.18% ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். சார்ஜிங் கட்டமைப்பு விரிவடைவது, எரிபொருள் விலையுடன் ஒப்பிடுகையில் மின்சார விலை குறைவாக இருப்பது, பி.எம். இ-டிரைவ் திட்டம் மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் போன்றவை விற்பனை வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.