மதுரை: சிலை கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற சுபாஷ் சந்திர கபூரை, தண்டனை காலம் நிறைவடைந்ததும் ஜெர்மனிக்கு சட்டப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தொன்மையான சிலைகள் திருடப்பட்டு கடத்தப்பட்ட வழக்கில், சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2022 நவம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவர் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
தான் 2011 முதல் காவலில் இருப்பதாகவும், தண்டனை காலம் 2022 அக்டோபர் 31-இல் முடிந்ததாகவும் கூறிய அவர், அதற்குப் பிறகும் தன்னை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்துள்ளதாக மனுவில் தெரிவித்தார். மேலும், தாம் ஜெர்மன் குடிமகன் என்றும் குறிப்பிட்டார்.
மற்ற சிலை கடத்தல் வழக்குகளை நடத்த தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி கோரி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஜெர்மன் அரசிடம் விண்ணப்பித்ததாகவும், நான்கு வழக்குகள் தொடர்பான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், மேலும் ஆறு வழக்குகள் தொடர்பான கோரிக்கை ஜெர்மன் அரசு முடிவெடுக்காததால் நிலுவையில் இருப்பதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா மற்றும் என். குணசேகரன் அமர்வு, மனுதாரரை இரண்டு வாரங்களில் ஜெர்மன் அரசிடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்க மத்திய உள்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.





