சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க ஹிந்து முன்னணி ஏற்பாடுகள் செய்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்கள் நடைபெறவும், சிலைகள் கரைப்பு ஊர்வல ஏற்பாடுகள் சீராக அமையவும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முழுமையாக இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் 5,501 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், எர்ணாவூரில் பிரமாண்ட சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், விழாவை ஒட்டி காப்பு கட்டி 10 நாட்கள் சிறப்பு விரதம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.





