புதுடில்லி: கடந்த ஓராண்டில் இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (MCA) தரவுகள் தெரிவிக்கின்றன.
தரவுகளின்படி, 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரை 12 மாதங்களில் செயல்பாட்டிலுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 19.20 லட்சத்திலிருந்து 21.30 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 11% வளர்ச்சியாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச நிறுவன எண்ணிக்கை உயர்வு இதுவென கூறப்படுகிறது. சதவீத அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே வேகமான வளர்ச்சியாகவும், கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய தொழில் நடவடிக்கைகள் மீண்ட 2021-ல் பதிவான வளர்ச்சியுடன் ஒப்பிடத்தக்கதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வளர்ச்சி மஹாராஷ்டிரா, டில்லி போன்ற பாரம்பரிய தொழில் மையங்களைத் தாண்டி பீஹார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் நிறுவனங்கள் 16% உயர்ந்து 77,658 ஆகவும், பீஹாரில் 18% உயர்ந்து 49,500 ஆகவும், உ.பி.யில் 18% உயர்ந்து 2026 ஜூனில் 1.87 லட்சமாகவும் உள்ளன.
உட்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் வசதிகள் விரிவாக்கம், ஒழுங்குமுறை நடைமுறைகளில் தளர்வு போன்றவை தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.





