புதுடில்லி: பிறர் புகைக்கும் சிகரெட் புகையை நீண்ட காலம் சுவாசித்ததன் விளைவாக ஏற்பட்ட நோய் பாதிப்புகளால், இந்தியாவில் 2023ல் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக சர்வதேச மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இது 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 50% அதிகரிப்பாகும்.
புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் புகைப்பிடிப்பு காட்சிகளுடன் எச்சரிக்கை வாசகங்கள், மேலும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனைத் தடை போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
இந்த தகவல்கள் குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் – 2023 ஆய்வின் ஒரு பகுதியாக, 204 நாடுகளின் தரவுகளைத் திரட்டி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் இடம்பெற்றுள்ளன. 2023ல் உலகம் முழுவதும் 270 கோடி பேர் பிறர் புகையை சுவாசிக்கும் சூழலில் இருந்ததாகவும், அவர்களில் பாதி பேர் இந்தியா, சீனா, இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளில் இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் 76.7 கோடி பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுகளின் அடிப்படையில் சீனாவில் 66.4 கோடி பேர், இந்தியாவில் 44.4 கோடி பேர், இந்தோனேஷியாவில் 14.2 கோடி பேர் பல்வேறு கட்டங்களில் பிறர் புகையை சுவாசித்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 1990ல் 37.5 கோடியாக இருந்தது; 2023ல் 44.4 கோடியாக உயர்ந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் டாக்டர் நீது ஜெயின், பிறர் புகை பாதிப்பு நுரையீரலுடன் மட்டும் முடிவடையாது; நீண்ட காலத்தில் உடலின் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார். குறிப்பாக இதய தமனி நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும், நுரையீரல் வளர்ச்சி நிலையில் இருக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறி, நாடு முழுவதும் புகைப்பிடிப்பை குறைப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.





