சிங்கம்புணரி அருகே ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், சந்திரன் (45) மீது கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைகளை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மருதிபட்டியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளியான சந்திரன் மீது, திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2024 பிப். 4 அன்று ஒரு சிறுமியிடம் ‘மொபைலில் வீடியோ கேம் விளையாடலாம்’ எனக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் நான்கு சிறுமிகளை தின்பண்டம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், 2026 ஏப்ரலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஐந்து தூக்கு தண்டனைகள் மற்றும் ஆயுள் சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து சந்திரன் மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், ஐந்து சிறுமிகளின் வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டது. மேலும், சிறுமிகளின் பெற்றோர் மற்றும் மனுதாரருக்கிடையே முன்பே தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததாகவும், அரசு தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து கீழமை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, சந்திரனை மதுரை மத்திய சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.





