மும்பை ஜூஹு இஸ்கான் வளாகத்தில் உள்ள கோவிந்தாஸ் உள்ளிட்ட மூன்று உணவகங்களின் உரிமங்களை மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே செப்டம்பர் 9 அன்று சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், உணவகங்களில் பெயரளவிலான சோதனை அல்லாமல் சமையலறை வரை சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளை அவர் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய சோதனையில் சமையலறைகளில் சுகாதாரக் குறைபாடுகள், பூச்சிகள் தொல்லை, தேங்கிய கழிவுநீர் உள்ளிட்டவை மற்றும் உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து மூன்று உணவகங்களின் உரிமங்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டன. மீண்டும் அனுமதி வழங்கப்படும் வரை அவற்றை திறக்கக் கூடாது என்றும், உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




