சென்னை போரூர் அருகே 2017ல் நடந்த ஆறு வயது சிறுமி சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு (Curative) மனு தாக்கல் செய்துள்ளது. இது அரசின் கடைசி சட்ட வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கு விவரங்களின்படி, அப்பகுதியில் பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

விசாரணை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானதாகவும், பல கட்ட தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் 2018ல் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் மேல்முறையீட்டில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் 2025ல் அவரை விடுதலை செய்தது.

இந்த விடுதலைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது அதற்குப் பிறகான கடைசி முயற்சியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.