வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய பருவமழைக் காலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் பணிகளை, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் வாரத்தில் குறைந்தது இருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வில் கண்டறியப்படும் குறைகளை உடனடியாக சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரையை அகற்றவும், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். பருவமழைக்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.