ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில், அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ரஷ்யா வரவேற்கிறது என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இந்திய பத்திரிகையாளர்களுடன் இணையவழியில் பேசிய பெஸ்கோவ், போரை முடிக்க இந்தியா பங்களிக்க விரும்புவதை மாஸ்கோ மதிப்பதாக கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சிகளையும் ரஷ்யா வரவேற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு தெரியும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்ற அணுகுமுறையில் இரு தரப்பின் நிலைப்பாடுகள் பெருமளவில் ஒத்துப்போகின்றன என்றும் பெஸ்கோவ் கூறினார். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக செப்டம்பர் 11 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டில்லி வர உள்ள சூழலில் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி புடினை சந்தித்து பேச உள்ளதாகவும், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





