பிரதமர் நரேந்திர மோடி பொதுவாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்வை முன்னிட்டு, ஒருமாத கால பொதுநல சேவை இயக்கம் தொடங்கப்படும் என்று பாஜ தலைவர் நிதின் நபின் அறிவித்தார்.

புதுடில்லியில் உள்ள பாஜ தேசிய தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றதுடன் அவரது பொதுவாழ்க்கை தொடங்கியதாகவும், அதன்பின் படிப்படியாக முன்னேறி தற்போது பிரதமராக உள்ளதாகவும் கூறினார். அக்டோபர் 7-ஆம் தேதியுடன் 25 ஆண்டு நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி பிரதமராக பதவியேற்கும் முன் நாட்டின் பொருளாதாரமும் கொள்கை அமைப்பும் பலவீனமாக இருந்ததாகவும், தற்போது இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும் நிதின் நபின் கூறினார். மேலும், மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் நிலையும் நன்மதிப்பும் உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நினைவு நிகழ்வின் ஒரு பகுதியாக, மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ‘சேவா சங்கல்ப அபியான்’ நடத்தப்படும். இதில் ரத்ததான முகாம்கள், அக்டோபர் 2 அன்று தூய்மைப் பணிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்; மேலும் ‘ஆசிர்வாத் கா தியா’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு திட்டப் பயனாளிகளின் இல்லங்களில் விளக்குகள் ஏற்றப்படும் என அவர் கூறினார்.