பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தில் கடும் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக புறப்படும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
லண்டன் ஹீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட விமான நிலையங்களுடன் மான்செஸ்டர் மற்றும் ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வருகை தரும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டாலும், புறப்பாடுகள் ஒரு காலத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டன.
இதுவரை 625க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல பயணிகள் விமானம் ரத்து செய்யப்படும் முன் பல மணி நேரம் விமானத்திலேயே சிக்கி தவித்ததாகவும், திட்டமிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் குழுவினர் பணியாற்றி இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்க முயற்சி நடப்பதாகவும் பிரிட்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது. தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மன்னிப்பும் கோரப்பட்டது.
இதற்கிடையே, மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




