பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல், ‘சேவா சங்கல்ப் அபியான்’ (சேவை உறுதிமொழி) என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை நடத்த பா.ஜ. மேலிடம் முடிவு செய்துள்ளது. குஜராத் முதல்வராகவும் பின்னர் பிரதமராகவும் அவர் வகித்த அரசு தலைமைப் பொறுப்பில் மொத்தம் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மோடி 2001 அக்டோபர் முதல் 2014 மே 21 வரை குஜராத் முதல்வராக இருந்தார். 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து அவர் பிரதமராக முதன்முறையாக பதவியேற்றார். பின்னர் 2019, 2024 தேர்தல்களிலும் கூட்டணி வெற்றி பெற்றதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
டில்லியில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்தில் பேசிய கட்சித் தலைவர் நிதின் நபின், சாதாரண தொண்டராக தொடங்கிய மோடி இன்று பிரதமராக அயராது பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து 25 கோடி ஏழை குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டதாகவும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இயக்கத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 17 ‘சேவை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அன்று நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள் நடைபெறும்; மாலையில் அரசு திட்டங்களின் பயனாளிகள் மற்றும் பா.ஜ. தொண்டர்கள் பங்கேற்கும் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும். மேலும், மோடி அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அக்டோபர் 7 அன்று முக்கிய நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்ட அளவில் நடைபயணங்கள், பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள், செப்.17 முதல் அக்.7 வரை பள்ளிகளில் ஓவியம், பேச்சுப் போட்டிகள், கிராமங்களில் சுகாதார முகாம்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இளைஞர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோருக்காக ‘சேவா பர்ஸ்ட் இன்னோவேஷன் சேலஞ்ச்’ போட்டி நடத்தப்படும்; மேலும் அக்டோபர் 2 அன்று துாய்மைப் பணியும் நடைபெறும் என கட்சி தெரிவித்துள்ளது.




