புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, தென் மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்தில் மூன்று திட்டங்கள் இடம்பெறுகின்றன.
ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், ‘பி.எம். கதி சக்தி’ திட்டத்தின் கீழ் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் மொத்தம் 540 கி.மீ. தூரத்திற்கு இந்த திட்டங்கள் அனுமதி பெற்றுள்ளன.
அரசின் தகவலின்படி, நிலக்கரி, சிமென்ட், இரும்பு, உணவு தானியங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் மேம்படும். ஆண்டுக்கு கூடுதலாக 4.70 டன் சரக்கு கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயண நேரம் கணிசமாக குறையும் என்றும், வழித்தடங்களை ஒட்டிய சுமார் 2,121 கிராமங்களைச் சேர்ந்த 52 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
இந்த மேம்பட்ட ரயில் இணைப்புகள் தமிழகத்தில் பயணம் மேலும் வசதியாகி, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





