பெங்களூரு: பெங்களூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ‘பாரத ரத்னா’ விருது பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மல்லேஸ்வரம் சட்டசபைத் தொகுதியில் வாக்காளராக உள்ள ராவின் பெயரில் எழுத்துப் பிழை/முரண்பாடு இருப்பதாகக் கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த ராவுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டுள்ளது; அவருக்கு வயது 92.

கர்நாடகாவில் SIR பணிகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 23 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு காரணங்களால் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 2002 பட்டியலில் ராவின் பெயர் ‘ராமா’ என பதிவாகியிருந்ததாகவும், தற்போது ‘புரொப். சி.என். ராவ் எம்.,’ என இருந்ததாகவும் தெரிவித்தனர். பெயரில் முரண்பாடு இருந்தாலும், மதிப்புமிக்க நபர் என்பதைக் கருத்தில் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பரிந்துரை செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.