செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டில்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் சுமார் 4,800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியா நான்காவது முறையாக தலைமை தாங்கி நடத்துகிறது.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
35க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, அதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே நிலையம் மற்றும் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்காக 22 மாற்றுப்பாதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உச்சி மாநாடு நடைபெறும் நாட்களில் விமான நிலையம் செல்லவும், பொதுப் போக்குவரத்திற்கும் மெட்ரோவை பயன்படுத்துமாறு டில்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், டில்லி மாநகராட்சியின் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் செயல்பாட்டில் உள்ளது.




