சென்னை: இன்ஸ்டாகிராமில் தற்போது 80ஸ் கால புகைப்பட ஸ்டைலை மீட்டெடுக்கும் புதிய டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது. இதில் சாதாரண நெட்டிசன்கள் மட்டுமல்லாமல், பல பிரபலங்களும் இணைந்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் கடந்த காலம் உள்ளிட்ட பல சூழல்களை தத்ரூபமாக உருவாக்குவது சமூக வலைதளங்களில் எளிதாகி விட்டது. சமீபத்தில் சாட் ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட ‘ஜிப்லி’ அனிமேஷன் ஸ்டைல் படங்கள் வைரலான நிலையில், அதன் தொடர்ச்சியாக இப்போது 80ஸ் லுக் டிரெண்ட் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த டிரெண்டில், தங்களின் புகைப்படங்களை 1980களின் திரைப்பட கதாபாத்திரங்கள், பழைய குடும்ப ஆல்பம் படங்கள், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ போன்ற தோற்றத்தில் உருவாக்கி பகிர்கிறார்கள். அந்தக் கால ஷர்ட், பெல்ஸ் பேன்ட், மீசை, ஹேர்ஸ்டைல் போன்ற அம்சங்கள் கணகச்சிதமாக பொருந்தும் வகையில் படங்கள் உருவாகின்றன.
நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் மற்றும் நடிகர் அசோக் செல்வன் போன்றவர்களும் இதில் இணைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் தங்கள் வீரர்களை பழங்கால தோற்றத்தில் உருவாக்கி பகிர்ந்து டிரெண்டாக்கி வருகிறது.
இந்த டிரெண்ட் தற்போது இன்ஸ்டாகிராமில் “Add Yours” என்ற ஸ்டிக்கர் மூலம் உலகம் முழுவதும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.




