தமிழக நீர்வளத்துறை கட்டியுள்ள புதிய கதவணையில் காவிரி நீரை தேக்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும் ஆண்டுகளில் தமிழகத்திற்கு காவிரியில் அதிகளவில் நீர் வரத்து கிடைக்கிறது. ஆனால், அந்த கூடுதல் நீரை சேமிக்க போதுமான அளவில் கதவணைகள்/தடுப்பணைகள் இல்லாததால், மேட்டூர், முக்கொம்பு, கல்லணை ஆகிய இடங்களிலேயே பெரும்பாலும் நீரை தேக்க முடியும்; இதனால் பெருமளவு நீர் கடலுக்கு வீணாகச் செல்கிறது.
இந்த நிலையை மாற்ற, கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் கட்ட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் ஆதனூர் முதல் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் வரை கதவணை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ரூ.516 கோடி ஒதுக்கீட்டுடன் 2020ல் பணிகள் தொடங்கின.
பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் பணிகள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜனவரியில் கட்டுமானம் முடிந்தது. திட்டத்திற்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக ரூ.52 கோடி செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணிகள் தொடங்கும் முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெறப்படவில்லை. 2024 டிசம்பரில் தான் ‘பரிவேஷ்’ இணையதளம் மூலம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதுவரை அனுமதி கிடைக்காததால், புதிய கதவணையில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெல்டா விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




