தனியார் பள்ளிகளை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில், முக்கிய சந்தேகநபரான முத்துகுமாருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருதல், தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து தருவதாக கூறி, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தி.மு.க. செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் அரசகுமார் (59) கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசகுமாரின் கூட்டாளி என்றும் தி.மு.க. பிரமுகர் என்றும் குறிப்பிடப்படும் முத்துகுமார் (48) தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையிலும், அவரை தேடப்படுபவராக அறிவிக்கும் வகையிலும் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.