மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட நான்கு போலீஸார் மீது கொலை பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, கடந்தாண்டு ஜூன் 27 அன்று நிகிதா என்பவர் தன் நகைகள் திருடப்பட்டதாக அளித்த புகாரைத் தொடர்ந்து தொடங்கியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை தனிப்படை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், தனிப்படை போலீஸார் முன்பே கைது செய்யப்பட்டனர்.

கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இன்று மதுரை மாவட்ட 5வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தாமோதரன் நால்வர்மீதும் கொலைக்குரிய பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்து, அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார்.