புதுடில்லி: இந்திய விஞ்ஞானிகள் இரவும் பகலும் அயராது உழைத்ததால் இஸ்ரோவின் நற்பெயர் உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக உரையாற்றிய அவர், அழைப்பு விடுத்த அதிபர் எமானுவல் மேக்ரானுக்கு நன்றி தெரிவித்தார். விண்வெளி பல நூற்றாண்டுகளாக மனித கற்பனைக்கு ஊக்கமளித்தது; இன்று அது பூமியில் உயிர்களை காக்கும் பணிக்கும் உதவுகிறது என்றும் கூறினார்.
சந்திரயான்-3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் ரகசியங்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது என்றும், கடந்த ஆண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றதாகவும் நினைவூட்டினார்.
எதிர்கால இலக்குகளாக 2035க்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2040க்குள் நிலவுக்கு ஒரு இந்தியரை அனுப்புவதும் உள்ளதாக மோடி தெரிவித்தார். இஸ்ரோவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் பயனுள்ளதாகவும், இதற்குப் பின்னால் பல தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட பாதுகாப்பான விண்வெளித் திட்டங்களை இந்தியா ஆதரிப்பதாகவும், அறிவியல் தரவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பொதுநல நோக்கத்திற்கு பயன்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற இந்தியாவின் அணுகுமுறை பரவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.





