சென்னை பாஜ அலுவலகத்தில் பேச்சு

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி தங்களை “மதச்சார்பற்ற” கூட்டணி என கூறுவது “மிகப்பெரிய பொய்” என்று விமர்சித்தார். சென்னை பாஜ அலுவலகத்தில் பேசிய அவர், மதச்சார்புடன் நடந்து கொண்டு மதச்சார்பற்றதாக காட்ட முயல்வதாக குற்றம்சாட்டினார்.

மதச்சார்பு குறித்த குற்றச்சாட்டுகள்

சபாநாயகர் ஜெப மாலையுடன் வருவது, பைபிளை குறிப்பிட்டு பேசுவது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். எந்த மத நூலையும் குறிப்பிடுவது தவறல்ல என்றாலும், பகவத் கீதையையோ குரானையோ குறிப்பிடுகிறார்களா என கேள்வி எழுப்பி, அரசு அனைத்து மக்களுக்கானதா அல்லது கிறிஸ்துவ மக்களுக்கு மட்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இடைத்தேர்தல் அவசரம்; ‘குதிரைப்பேரம்’ குற்றச்சாட்டு

இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் வர வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய நயினார், இதற்குப் பின்னால் “குதிரைப்பேரம்” நடந்துள்ளதாக கூறினார். யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் சேரலாம் என்றாலும், பணம் கொடுத்து “விலைக்கு வாங்கி” சேர்த்ததாக தான் தனது குற்றச்சாட்டு என அவர் தெரிவித்தார்.

தலைமை விவகாரத்தில் கருத்து

பிரதமர் வேட்பாளர் தொடர்பான பேச்சில், முதலில் தங்களின் “உயரம்” என்ன என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும் என கூறிய அவர், அந்த கருத்து ராகுல் மற்றும் விஜய்க்கும் பொருந்தும் என குறிப்பிட்டார். மேலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னை வந்தால் பாஜவும் மற்ற கட்சிகளுடன் நிற்கும் என்றும், நாட்டின் நலனே தங்களின் முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.