புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளை வணிகப் பயன்பாட்டிற்கு திறப்பதற்கு முன், மரக்கன்றுகள் நடுவதும் அவற்றை பராமரிப்பதும் கட்டாய நிபந்தனையாகும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நஹாய்) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நெடுஞ்சாலை பணிகள் முழுமையாக முடிந்த பின், அது வணிக ரீதியான பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என சான்றளிக்கும் முன்பே, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மரநடவு பணிகள் கணிசமாக நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலையின் பசுமை மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் குறைந்தது 80 சதவீத நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறைந்தபட்சம் 90 சதவீத பிழைப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள மரக்கன்றுகளை நட்டு இலக்கை முழுமையாக அடையும் வரை, ஒப்பந்தத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பட்டுப்போகும் மரக்கன்றுகளுக்குப் பதிலாக, அதே வயதும் வளர்ச்சியும் கொண்ட செடிகளை நட்டு பசுமையின் சீரான தன்மையைப் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஆய்வு செய்தபோது, சாலை நடுப்பகுதி மற்றும் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை வளர்ப்பது ஒப்பந்தப்படி கட்டாயம் இருந்தும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நஹாய் வட்டாரங்கள் தெரிவித்தன.