ஊழல் வழக்குகளில் விசாரணை நீளுவதற்கு, வழக்குடன் நேரடி தொடர்பில்லாத ஆவணங்களையும் சாட்சிகளையும் அதிகமாக சேர்ப்பது முக்கிய காரணமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அசாம் மாநில கால்நடை பராமரிப்பு துறையில், போலி மருந்து ரசீதுகள் மூலம் ரூ.5.97 லட்சம் நிதி முறைகேடு நடந்ததாக 1993ல் எழுந்த புகாரைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், குவஹாத்தி உயர் நீதிமன்றம் அத்துறையின் அப்போது பொறுப்பாளராக இருந்தவரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, வினோத் கே. சந்திரன் அமர்வு விசாரித்தது. ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 13(1)(டி)ன் கீழ் தண்டனை நிலைநிறுத்த, குற்றம்சாட்டப்பட்டவர் முறைகேடாக பலன் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேறு ஒருவரிடமிருந்து நிதி ஆதாயம் பெற்றிருக்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், மனுதாரர் எந்த பண ஆதாயமும் பெறவில்லை என்பதை உயர் நீதிமன்றமே பதிவு செய்துள்ள நிலையில், அவரை அந்தப் பிரிவின் கீழ் தண்டித்தது தவறு என அமர்வு தெரிவித்தது.
மேலும், அரசு தரப்பில் 62 சாட்சிகள் விசாரிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றம் ஒன்பது சாட்சிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பது, மீதமுள்ளவை தேவையற்றவை என்பதை காட்டுகிறது என நீதிமன்றம் கூறியது. அரசு கருவூலத்திலிருந்து பணம் விடுவிக்கப்பட்டபோது அது யாருடைய வங்கி கணக்குக்கு சென்றது என்பதைக் குறித்து விசாரணை முகமைகள் ஆய்வு செய்யாததையும் சுட்டிக்காட்டியது.
இந்த காரணங்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்து மனுதாரரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டது.




