சென்னை: டாஸ்மாக் தொடர்பான முறைகேடுகள் குறித்து சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் மாவட்ட மேலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் மீது இம்மாதம் 1ம் தேதி முதல் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறினார்.

ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் முறைகேடு நடைபெறுகிறது என்றால், கடை பணியாளர்கள் மட்டுமின்றி அந்த மாவட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை ஊக்குவித்தவர்கள் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தனது பெயரை பயன்படுத்தி கடைகளில் பணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அதிகாரிகள் மீது புகார் வந்தாலும் நடவடிக்கை உறுதி என கூறிய அவர், மது வகைகள் கொள்முதல் செய்யப்படும் 11 நிறுவனங்களும் சமமாகவே பார்க்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் குறித்து அமலாக்கத்துறை முன்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்களை முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர், இப்போது நடவடிக்கை எடுக்கவே சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன; அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் வலியுறுத்தினார்.