சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தாராபுரம் சட்டசபைத் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டியிடுவார்கள் என கட்சி தெரிவித்தது.

தமிழகத்தில் ஏழு சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 6ல் நடைபெற உள்ள தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை விரைவாக இறுதிப்படுத்தி வருகின்றன. திமுகவும் இரு தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது.

தவெக அறிவித்த இருவரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து பின்னர் தவெகவில் இணைந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், அனைவரும் வெற்றியை இலக்காகக் கொண்டு வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” பெறச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அமாவாசை நாளான இன்று நல்ல நாள் என்பதால் காத்திருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.