தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கலில் சில குறைபாடுகள் உள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், 1,626 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் 6,444 அங்கன்வாடிகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 2024க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது இதன் நோக்கமாக இருந்த நிலையில், திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2023–24ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் 81.87% கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
பயனாளிகள் தெரிவித்த தகவலின்படி, குடிநீர் கிடைப்பதால் பெண்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. மேலும் பாதுகாப்பான குடிநீர் கிடைத்ததால் வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நீர் வழி நோய்கள் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கான இணைப்பு குறைவு குறித்து 2024 அக்டோபரில் திட்ட இயக்குநர் தெரிவித்ததாகவும், மீதமுள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.




