வாஷிங்டன்: நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் தொகை வழங்கப்படுவது, பார்லிமென்டின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் தனது கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் மட்டுமே என அவர் கூறினார். மேலும், அந்த பணத்தை முழுமையாக அமெரிக்காவுக்குள் மட்டுமே செலவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிபரின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் உறுப்பினர் பதவிகளுடன் பல மாநில மற்றும் உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை எதிர்க்கட்சியினரும் சமூக ஊடக பயனர்களும் வாக்குகளை ஈர்க்கும் முயற்சி என விமர்சித்துள்ளனர். நாட்டின் அனைத்து வாக்காளர்களுக்கும் இத்தொகையை வழங்க தேவையான நிதி எங்கிருந்து வரும் என்பது குறித்து டிரம்ப் இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.