வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிந்ததும் ஈரான் தொடர்பான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் “மிகச் சிறந்த” உரையாடல் நடந்ததாகவும், புடின் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார் என்றும் கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால் அது நல்லதாக இருக்கும் என குறிப்பிட்ட டிரம்ப், இருவரும் ஒருவரையொருவர் வெறுப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஈரான் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும், அமெரிக்க தேர்தல் ஓட்டெடுப்பில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார். ஈரானின் ஒன்பது கப்பல்களை அமெரிக்கா செயலிழக்கச் செய்ததாகவும், அவற்றில் பல முற்றிலும் சேதமடைந்ததாகவும் கூறி, அந்த தாக்குதல்களுக்கு தானே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் இதுபோன்ற பல நிகழ்வுகள் தொடரலாம் என்றும், அணுசக்தி ஒப்பந்தத்தைத் தாண்டி விரிவான அம்சங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் டிரம்ப் கூறினார். அணுசக்தி ஒப்பந்தம் 99.9 சதவீதம் உறுதி என்றும், மூன்று மாதங்களுக்கு முன்பு பேசப்படாத பல விஷயங்களும் இப்போது பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துகள், நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்களை முன்னிட்டு வெளியாகியுள்ளன. அதில் பார்லிமென்ட், செனட் உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட பல மாநில மற்றும் உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது; இது அதிபரின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் தேர்தலாகும்.