புதுடில்லியில் செப்டம்பர் 12, 13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்கும் பல வெளிநாட்டு தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்முவுடனும் ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

அட்டவணைப்படி, செப்டம்பர் 11 அன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோருடன் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார்.

செப்டம்பர் 12 அன்று எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்தித்து பேசுகிறார்.

செப்டம்பர் 13 அன்று கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக், தென் ஆப்ரிக்க அதிபர் மட்டமேலா சிரில் ராமபோசா மற்றும் புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் தலைநகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டைச் சுற்றியுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.