தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வெளிநாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயணத் திட்டப்படி, முதல்வர் நேற்று இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் சென்றடைந்தார்.

லண்டனில் முதலீட்டாளர்கள் சந்திப்புகளில் பங்கேற்கும் அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

மேலும், புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன்’ மோட்டார் ரேஸிங் சர்க்யூட்டின் வசதிகள் மற்றும் சுற்றுப்பாதையையும் அவர் பார்வையிட உள்ளார். இந்தக் குழு 17ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளது.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவன இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.