மும்பை: நாடு முழுவதும் 2027 மார்ச்சுக்குள் முழுமையாக டிஜிட்டல், தடையற்ற சுங்கக்கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்க வசூலை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பாஸ்டேக்கை வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாகவும், இது சுங்க வசூலில் முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

வாகன பதிவு எண் மற்றும் பாஸ்டேக் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் முறையால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.10,000 கோடி வருவாய் கிடைக்கும் என அவர் கூறினார். முன்பு 12 நிமிடங்கள் வரை, சில சமயங்களில் 30 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை இருந்ததாகவும், பாஸ்டேக் வந்த பிறகு அந்த நேரம் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய தடையற்ற டிஜிட்டல் சுங்க முறை நிறுத்தங்களை நீக்குவதே நோக்கம் எனவும், இதனால் நேரமும் எரிபொருளும் சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் 60% முதல் 70% வரை பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு பிப்–மார்ச்சுக்குள் நாடு முழுவதும் இந்த முறை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.