ஈரோடு மாவட்டத்தில் பத்திரப்பதிவை முடிக்க ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டும் பெற்றும் உள்ளதாகக் கூறப்படும் வழக்கில், கவுந்தப்பாடி சார்பதிவாளர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தோடு அருகே ராயர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (47) தனது பத்திரத்தை கிரையம் செய்து பதிவு செய்ய, கவுந்தப்பாடியில் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது சார்பதிவாளர் சங்கர் (42) ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. சாந்தி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்தில் வலைவீசி காத்திருந்தனர். செப்.10 அன்று மாலை 6.30 மணியளவில் கார்த்திகேயன் பணத்துடன் அலுவலகத்திற்கு சென்றார்.
பத்திர எழுத்தர் வெற்றி (30) மூலம் பணம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், சார்பதிவாளர் சங்கர் உள்ளிட்ட இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.





