புதுடில்லி: அதிக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுப் பொருட்களுக்கு முன்பக்க முகப்பிலேயே எச்சரிக்கை லேபிள் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, தேசிய நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் உடல் பருமன் ஒரு பொது சுகாதார பிரச்னையாக உருவெடுத்து வருவதாகவும், அதிக அளவில் உப்பு–சர்க்கரை–கொழுப்பு சேர்க்கப்பட்ட பாக்கெட் நொறுக்கு தீனிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரால் விரும்பி உண்ணப்படுவதாகவும் கவலை தெரிவித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, மக்களின் ஆரோக்கியத்தில், குறிப்பாக குழந்தைகளின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. மேலும், பொதுவாக உணவுப் பொருட்களின் விவரங்கள் பாக்கெட்டின் பின்புறத்தில் அச்சிடப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி உப்பு/சர்க்கரை/கொழுப்பு இருந்தால் அதை தெளிவாக எச்சரிக்க வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதா என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ‘அல்ட்ரா பிராசஸ்டு’ உணவுகளுக்கு கடுமையான எச்சரிக்கை குறியீடு அவசியம் என்றும், இத்தகைய பொருட்களுக்கு பிரத்யேக நிறத்தில் எச்சரிக்கை குறியீடுகள் வழங்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிமன்றம், ஓரிரு தினங்களில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தும், இணையதளத்தில் பதிவேற்றப்படும் உத்தரவை அனைத்து தரப்பினரும் படித்து அடுத்த விசாரணைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.





