அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு ஆதாரத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பொது வெளியில் கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

அந்த மதிப்பீட்டின்படி, சுமார் 178 அணு குண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் மத்திய ஆயுத சேமிப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். மேலும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஒன்பது ஏவுதிறன் அமைப்புகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன; இதில் வான்வழி தாக்குதலுக்கான இரண்டு அமைப்புகள் மற்றும் தரைவழி ஆறு ஏவுகணை அமைப்புகள் அடங்கும். கூடுதலாக, மேலும் இரண்டு புதிய அமைப்புகள் எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல்பாட்டில் உள்ள ஏவுதிறன் அமைப்புகள் மூலம் 160க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் இருப்பதாக அறிக்கை மதிப்பிடுகிறது. புதிய ஏவுகணைகள் படையில் இணைக்கப்படுவதற்காக கூடுதல் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கடல் வழி அணு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனும் விரிவடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான உதாரணமாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிதமன் கடந்த ஏப்ரலில் கடற்படையில் சேர்க்கப்பட்டதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் 2027ல் படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், புதிய ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டுக்கு வரும்போது மொத்த கையிருப்பு மேலும் உயரலாம் எனவும் குறிப்பிடுகிறது.

மேலும், அணு ஆற்றல் மூலப்பொருட்களுக்கான சர்வதேச குழுவின் கணக்கீட்டை மேற்கோள் காட்டி, 2026 தொடக்கத்தில் இந்தியா சுமார் 730 கிலோ புளூடோனியம் உற்பத்தி செய்திருக்கலாம்; இதில் 170 கிலோ வரை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் என கூறுகிறது. ஒரு அணுகுண்டுக்கு சராசரியாக நான்கு கிலோ புளூடோனியம் தேவைப்படும் என்ற கணக்கில், 140 முதல் 225 வரை அணுகுண்டுகள் தயாரிக்க முடியும் என்ற கோட்பாட்டையும் முன்வைக்கிறது. அதே நேரத்தில், 190 என்ற எண்ணிக்கை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் அல்ல; துல்லியமான கையிருப்பு பொதுவெளியில் தெரியவில்லை எனவும் அறிக்கை வலியுறுத்துகிறது.