ஹார்முஸ் ஜலசந்தியில் 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

அதே பகுதியில் சமீபத்தில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது IRGC ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக செப். 8 அன்று அமெரிக்க ராணுவம் ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இதற்கு பதிலடியாக, ஜோர்டானில் பப்ரக் மற்றும் அஸ்ரக் பகுதிகளில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் எப்-15 ரக 8 போர் விமானங்கள் சேதமடைந்ததாகவும், ‘வார்ஹாக்’ என அழைக்கப்படும் ஏ-10 தாக்குதல் விமானம் ஒன்று கடுமையாக சேதமடைந்து சக்கரம் மற்றும் இறக்கையின் ஒரு பகுதி காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்க தரப்பில் உயிரிழப்பு இல்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் 8 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தடையை மீறிச் சென்றதாக கூறி பிற நாடுகளைச் சேர்ந்த 10 கப்பல்களையும் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் தன் கட்டுப்பாட்டு மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது. அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.